திங்கள், 16 மார்ச், 2020

திராவிட இயக்கக் கொள்கைகளும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து வாழ உறுதியெடுப்போம் - மு.க.ஸ்டாலின்


“பேராசிரியர் அவர்களின் நினைவாக, தமிழின உணர்வும் - தமிழ்மொழிப்பற்றும் -  திராவிட இயக்கக் கொள்கைகளும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து வாழ உறுதியெடுப்போம்” 
-  மு.க.ஸ்டாலின்  உரை.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை நாம் இழந்தபோது, என்ன மனநிலைக்கு நான் ஆளாக்கப்பட்டேனோ, அதே நிலையில்தான் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறேன்.

98 ஆண்டுகாலம் பேராசிரியர் வாழ்ந்திருக்கிறார்கள். 50 ஆண்டுகாலம் நம்முடைய பேராசிரியர் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், பள்ளிக்கூட மாணவனாக நான் இருந்தபோது கோபாலபுரம் பகுதியில் ‘இளைஞர் தி.மு.க.’ என்ற ஒரு மன்றத்தை தொடங்கி, ஒரு முடித்திருத்தும் நிலையத்தில் அதனுடைய அலுவலக திறப்பு விழாவை நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு நம்முடைய தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் வருகைதந்து அந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். தலைவர் இல்லத்தில் இருந்து ஒரு பர்லாங் தூரம் இருக்கும்; நடந்தே வந்து திறந்து வைத்தார்கள். அவ்வளவு புன்னகையோடு திறந்து வைத்தார்கள். அதுதான் தற்போது நினைவுக்கு வருகிறது. அதை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக ஏறக்குறைய 43 ஆண்டுகாலம், அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக, துணையாக இந்த இயக்கத்தை கட்டிக் காத்து, இந்த இயக்கம் கம்பீரமாக விளங்கிக்கொண்டிருக்கிறது என்றால், அது அவருடைய சிறப்பான பணி என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு. எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்து கொண்டிருந்தவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள். அதனால் அந்த இழப்பு என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் அவர் மறைந்த உடனே என் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை எல்லாம் அப்படியே சில வார்த்தைகளாக நான் பதிவு செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

“திராவிட சிகரம், சாய்ந்துவிட்டது.

சங்கப்பலகை சரிந்து விட்டது!

இனமான இமயம் உடைந்துவிட்டது.

எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்!

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!

முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்!

எனது சிறகை விரிக்க வானமாய் இருந்தவர்!

தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார்!

பேராசிரியர் அவர்களோ என்னை வார்ப்பித்தார்!

எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்.

எனக்கு உற்சாகமும் ஊக்கமும் ஊட்டியவர் பேராசிரியர் அவர்கள்.

இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் நிறுத்தி வைத்துள்ளது. - இதுதான் உண்மை! பேராசிரியர் பெருந்தகையை பெரியப்பாவாகவே நான் ஏற்றுக்கொண்டேன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது சாதாரண காரியம் அல்ல; அது மிக சிரமம். ஆனால் நானோ பேராசிரியர் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டவன். அந்த கர்வம் இன்னும் எனக்கு இருக்கிறது.

“தலைவர் கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்” என அவரே சொன்னார். அதை மேடையில் பலர் குறிப்பிட்டு சொன்னார்கள். இதைவிட வாழ்நாளில் எனக்கு பெரிய பெருமை கிடைக்குமா? - இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட, பெருமகன் மறைந்தது என்னுடைய இதயத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பேராசிரியர் பெருந்தகையே நீங்கள் ஊட்டிய இனப்பால் – மொழிப்பால் – கழகப்பால் - இம்முப்பால் இருக்கிறது.

அப்பால் நமக்கு வேறு என்ன வேண்டும்?!

உங்கள் அறிவொளியில்

எங்கள் பயணம் தொடரும்”

என நான் குறிப்பிட்டு, என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அந்தளவுக்கு எனக்கு எல்லாமும் அவராகத்தான் இருந்தார். அவர் வழிகாட்டி மட்டும் அல்ல; என்னுடைய தந்தையாகவும் இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது!

பேராசிரியர் அவர்கள் உடல் நலிவுற்று, இல்லத்தில் ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார். நானும் நம்முடைய பொருளாளர் அவர்களும், கழக முன்னோடிகளும், அடிக்கடி அவரை நேரடியாக சென்று சந்திப்பதுண்டு - உடல்நலம் விசாரிப்பதுண்டு.

நாங்கள் உள்ளே செல்கிறபோது, எங்களை பார்த்ததும் சிரிப்பார். நாங்கள் வணக்கம் சொல்வோம். இருகரம் கூப்பி கும்பிடுவார். அருகில் வரச்சொல்வார். கையை பிடிப்பார். பிறகு என்னுடைய முகத்தை பார்த்து சிரிப்பார். நாங்கள் வெளியில் நடக்கக்கூடிய சம்பவங்களை எல்லாம் சொல்வோம். கழக நிகழ்ச்சிகள், அரசியல் நிலவரங்கள், சட்டமன்ற நிகழ்ச்சிகள், நான் எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்தேன் என்ற செய்திகள் எல்லாம் வரிசையாக சொல்வேன். அதை எல்லாம் கூர்ந்து கவனிப்பார். 5 அல்லது 10 நிமிடங்களுக்கு பிறகு எங்களை பார்த்து புறப்படுங்கள் என்று சொல்வார். எதற்காக சொல்கிறார் என்றால், “உனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் அதையெல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறார் புறப்படு” என்பார்.

அப்படி ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி அனுப்பி வைப்பார். மகனைப் போல் பேராசிரியரை நான் கவனித்துக் கொண்டேன் என்று சமூக ஊடகங்களிலே எழுதி இருக்கிறார்கள். சில நண்பர்களும் சொல்லி இருக்கிறார்கள். அது தவறு -  பேராசிரியருக்கு நானும் மகன்தான்! அவரே சொல்லி இருக்கிறார். “ஸ்டாலின் தலைவர் கலைஞரின் வாரிசு மட்டுமல்ல; எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். எப்போது தெரியுமா? 1988ஆம் ஆண்டு!

இளைஞரணியின் அலுவலகம் அன்பகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அன்பகத்தை அலுவலகமாக பயன்படுத்துவதற்கு இளைஞரணியிடம் தலைமைக் கழகம் ஒப்படைக்கிறது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளன்று நடக்கிறது. தலைவர், பொதுச்செயலாளர், மறைந்த நாஞ்சிலார், கழக முன்னோடிகள் என அனைவரும் வந்தார்கள். அப்போது சில பத்திரிகைகள், ஸ்டாலினுக்கும், அன்பழகனுக்கும் போட்டியை கலைஞர் அவர்கள் உருவாக்குகிறார் என்று விமர்சனம் செய்தது.

“ஒரு தலைவனுக்கு பிள்ளையாக பிறப்பது தப்பா? அந்த பிள்ளை தனது உழைப்பால் உயர்வது தப்பா என நாஞ்சிலார் அவர்கள் பேசுகிறபோது  பதில் சொல்லிப் பேசினார். அதை தொடர்ந்து பேசிய பேராசிரியர் அவர்கள், “கலைஞர் மகன் என்பது கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் பிள்ளைதான் என்பதை நாட்டுக்கு தெரிவிக்கிறேன்” என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்.

பேராசிரியரை பொறுத்தவரை என்னை அவர் பிள்ளையாகவே கருதினார். நானும் அவரை பெரியப்பாவாகத்தான் கருதிக்கொண்டிருக்கிறேன். 2003ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நம்முடைய கழக மண்டல மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

முதல்நாள் நான் பேசினேன். இரண்டாவது நாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் பேசுகிறார். அப்போது சொன்னார், “ஸ்டாலின் பேச்சை நேற்று நான் முழுமையாக கேட்டேன். யாருடைய மகன் என்ற முத்திரைக்கு முத்திரையாக அமைந்தது” என்று சொன்னார். அதையும் தாண்டி அவர் சொன்னது, “கலைஞர் மூலமாக எதிர்பார்த்த பலனை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்” என்று சொன்னார்.

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும், சூழ்நிலையிலும், அப்படி பாராட்டி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியவர்தான் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் அறிவாலயம் வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி, ‘பேராசிரியர் வந்துவிட்டாரா?’ - வரவில்லை என்றுச் சொன்னால் போன் செய்து வரச்சொல் என்பார். வந்தபிறகு எல்லா பிரச்சினைகளையும் அலசி ஆராய்வார்.

இருவரும் எந்தப் பிரச்சினை என்றாலும் அலசி ஆராய்வார்கள்; விவாதிப்பார்கள்; நீண்டநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். தலைவர் கலைஞருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்தார் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் உங்களுக்குத் தெரியும். அவர் வீட்டில் ஓய்வெடுக்கும்போதும் சரி, மருத்துவமனையில் இருக்கும்போதும் சரி கண்விழிக்கும்போது எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, ‘பேராசிரியர் வந்திருக்கிறாரா?’ என்பதுதான்.

அவரும் வருவார். வந்தபிறகு இவர் கையை நீட்டுவார், அவரும் கையை நீட்டுவார். இருவரும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக் கொள்வார்கள். முகத்தைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எங்களிடம் சொல்வார், “பேராசிரியர் அவர்கள் ஒருவரை மதிப்பது என்பது, ஏற்றுக்கொள்வது என்பது பெரிய விஷயம். அப்படிப்பட்ட பேராசிரியர் என்னை மதிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.

கலைஞர் மறைந்தபோது, பேராசிரியர் இருக்கிறார் என்ற மனநிறைவுடன் நாம் இருந்தோம். ஆனால் அந்தப் பேராசிரியரும் மறைந்துவிட்டார். அவரை வீட்டில் போய்ப் பார்த்துவிட்டு வரும்போது துரைமுருகன் மற்றும் கழகத் தோழர்கள் எல்லாம், “பேராசிரியருக்கு 98 வயது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ‘செஞ்சுரி’ போட்டுவிடுவார். திராவிட இயக்கத் தலைவர்களில் நூறாண்டு வாழும் தலைவர் என்ற சாதனையை நிகழ்த்திவிடுவார்” என்று பேசுவோம். ஆனால், எதிர்பாராத நிலையில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தபிறகு அவருக்கு சோர்வு வந்துவிட்டது என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தோம். தலைவர் மறைவுக்குப்பின் பேராசிரியர் பேசுவதையே குறைத்துக்கொண்டார். அவருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் பேராசிரியர் அவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்.  கலைஞர் மறைந்ததைத் தாங்க முடியாமல்தான் பேராசிரியர் மறைந்துவிட்டார் என்பது உண்மை.

அவரை இழந்து இன்று வாடிக்கொண்டிருக்கிறோம். அவருடைய திருவுருவப் படத்தைத் திறந்துவைத்திருக்கிறோம். எல்லாத் தலைவர்களையும் சொன்னதை நானும் வழிமொழிந்து சொல்ல விரும்புகிறேன். பேராசிரியரின் நினைவாக நாம் எடுக்கவேண்டிய உறுதிமொழி, தமிழின உணர்வும் தமிழ்மொழிப் பற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து வாழ வேண்டும். பேராசிரியர் விட்டுச்சென்ற பணிகளைத் தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நின்று, பேராசிரியர் வழியில் நின்று தொடர்ந்து மேற்கொள்ள உறுதியெடுப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக