திங்கள், 16 மார்ச், 2020

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு தீர்மானங்கள்


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு திருச்சி - 15.03.2020 - பொதுக்குழு தீர்மானங்கள்

1.பேரா. க.அன்பழகன் அவர்கள் மறைவு - இரங்கல் தீர்மானம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகமூத்த தலைவரும், அதன் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு இந்த பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

நீதிக்கட்சி தொடங்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடன் இணைந்து சமூக அரசியல் களத்தில் வலம்வந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் திராவிட இயக்க கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

சட்டமன்ற உறுப்பினராக நீண்ட காலம் பயணித்தவர் பேராசிரியர் அவர்கள். சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும் செயல்பட்டுள்ளார்கள். 1977 தொடங்கி இறக்கும் வரை திமுகவின் பொதுச்செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த பேராசிரியர் அவர்கள், இந்தி திணிப்பு மற்றும் ஈழப்பிரச்சினை விவகாரத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர் ஆவார். திராவிட இயக்க வரலாற்றில் பின்னிப் பிணைந்த பேராசிரியர் அவர்களின் இழப்பு தமிழ் சமூகத்துக்கும் ஒரு இழப்பாகும்.

2. அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ), என்.ஆர்.சி., என்.பி.ஆர்-யை ரத்து செய்ய வேண்டும்:

குடியுரிமையை மத அடிப்படையில் வழங்க முடியாது. அவ்வாறு சட்டம் இயற்றுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 14க்கு முரணானது. சமயம், சாதி, பால், இனம், நிறம் அடிப்படையில் யாரையும் வேறுபடுத்தக் கூடாது என அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 14 குறிப்பிடுகிறது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 அதன் உயிர் நாடியான எந்த அடிப்படைக் கூறுகளையும் மீறும் வகையில் எந்தப் புதிய சட்டமும் இயற்ற முடியாது, அவ்வாறான நடைமுறை சட்டவிரோதம் என குறிப்பிடுகிறது. எனினும், அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக  மீறும் வகையில், மத ரீதியாக நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் திருத்தங்களை மேற்கொண்டு சட்டமாக்கியுள்ளது. ஆகவே மக்களை மதரீதியாக பிரித்துப் பார்க்கும் அரசியலமைப்புக்கு விரோதமான தவறான சட்டத்தை இயற்றியுள்ள மத்திய பாஜக அரசை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதோடு சிஏஏ, என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர்-யை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

3. சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: 

நாட்டு மக்களை மத ரீதியில் பிளவுப்படுத்தும், அரசியலமைப்பை மீறும்  குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.பி.ஆர்.-ஐ அமல்படுத்த மாட்டோம் என்று அண்டை மாநிலமான, கேரளா, பாண்டிச்சேரி, பஞ்சாப் மேற்குவங்கம்  உள்ளிட்ட  மாநில அரசுகள் அறிவித்துள்ளது போலவும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக 14 மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைப் போலவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் இலட்சியங்களை நிலைநிறுத்தவும், தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

தமிழகத்தில் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்கட்சிகளின் தூண்டுதலால் நடக்கும் போராட்டம் என அரசியல் ரீதியாக குற்றம்சாட்டி மக்களின் நியாயமான கோரிக்கையை சுருக்கிவிடாமல், தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அரசமைப்பு விரோத சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

மேலும் ஜனநாயக அடிப்படையில் போராடியவர்கள் மீது போடப்பட்ட அத்துனை வழக்குகளையும் நிபந்தனையின்றி வாபஸ்பெற வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுகொள்கிறது.

4. என்.பி.ஆர். கணக்கெடுப்பிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்:

என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த கணக்கெடுப்பு 2003 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட விதிமுறைகளின் கீழ் திரட்டப்படுகிறது. ஆகவே இது முழுக்க முழுக்க என்.ஆர்.சிக்கான தகவல் திரட்டலே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

என்.ஆர்.சி.யை செயல்படுத்த பாராளுமன்றம் மூலம் இயற்றப்பட்ட சட்டங்கள் தேவையில்லை அதனை துணை சட்டங்கள் மூலம் செயல்படுத்த முடியும் என்ற விதி உள்ளதாலும், என்.பி.ஆர். என்.ஆர்.சியின் முதல்படி என்று மத்திய பாஜக அரசும் 9 முறை பாராளுமன்றத்தில் அதனை பதிவு செய்துள்ளதாலும், என்.ஆர்.சிக்கு தரவுகளை அளிக்கும் துணைச் சட்டம் என்.பி.ஆர். தான் என்பது அதன் விதிகளின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே, என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடைபெற்றால் அதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒத்துழையாமையை மேற்கொள்ள வேண்டும். வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர்த்து, மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்பினை புறக்கணிக்கும் வகையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழையாமையை மேற்கொள்ள இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

5. டெல்லி இனப்படுகொலை:  உயர்மட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை

வடகிழக்கு டெல்லியில்  சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டம் எனும் பெயரில், பாஜக தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக்கலவரம் நடந்தேறியுள்ளது. கலவரக்காரர்களுடன் காவல்துறையினரும் இணைந்து மிகக்கொடூரமான இனப்படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வன்முறையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். பலரையும் இன்னும் காணவில்லை. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 15க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் எரிக்கக்கப்பட்டுள்ளன. இந்த இனக்கலவரத்தை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த கலவரத்திற்கு காரணமான வெறுப்பு பேச்சுக்களை பேசிய பாஜக தலைவர்களை கைது செய்து உடனடியாக சிறையிலடைக்க வேண்டும். அதேபோல், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம்களை நோக்கிய கண்மூடித்தனமான கைதுகள் (arbitrary arrest) நிறுத்தப்பட வேண்டும்.  தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புகளை பலப்படுத்தி, வெளியேறிய மக்கள் மீண்டும் சொந்த குடியிருப்புகளுக்கு செல்லவும், மக்களிடம் கலவரம் குறித்த அச்சம் போக்கப்படவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்மட்ட நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து, கலவரங்களுக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களை கடுமையாகத் தண்டிக்கவேண்டும் எனவும் இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

6. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் - தமிழக அரசுக்கு நன்றி

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதனை தீர்மானமாக  நிறைவேற்றியுள்ள தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை இந்த பொதுக்குழு வரவேற்று நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.  காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி அதற்காக தன்னலமற்று போராடிய அனைவருக்கும் இந்த பொதுக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திருவாரூர், நாகை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும்  ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

ஆகவே,  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எத்தகைய அழிவுத்திட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களையும் தடுக்க வேண்டும் என இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகின்றது.

7. தேக்கநிலையில் நாட்டின் பொருளாதாரம்:

இந்திய பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேக்கநிலைக்கு சென்றடைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி, நுகர்வு பொருட்கள் துறையில் வீழ்ச்சியடைந்துள்ளன, முதலீடுகள் குறைவு காரணமாக பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்போகிறோம் என்று கடந்த ஜூன் மாதம் மத்திய பாஜக அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால், பொருளாதாரத்தின் மோசமான உண்மை நிலைகள் என்னவென்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் முதலீடுகளை பின்வாங்கியும், தங்கள் உற்பத்தியையும் நிறுத்தியதால், வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளும், அந்நிறுவனத்துடன் தொடர்புடைய சிறு நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதற்கு மோசமான ஆட்சி நிர்வாகமே காரணம் என்று பொருளாதார வல்லநர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, உள்நாட்டுப் பிரச்னைகளே குறிப்பாக வகுப்புவாத வெறுப்பு நடவடிக்கைகளும், மோடி அரசு முன்னர் கொண்டுவந்த டிமானிடைஷேன் மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளும் தான் முதன்மையான காரணங்கள் என்று சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆகவே, மத்திய பாஜக அரசு மதவாத, வெறுப்பு நடவடிக்கை சட்டங்கள், நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

8. பெட்ரோல் டீசல் விலை மற்றும் கலால் வரியை குறைக்க வேண்டும்:

சர்வதேச சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை 70 சதவீதம் விலை வீழ்ச்சியடைந்த நிலையிலும், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக அரசு தயாராக இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என்று கூறி பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், இப்போது, கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள போதிலும் விலை குறைப்பு என்பது மேற்கொள்ளப்படவில்லை.

இது ஒருபுறமிருக்க, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளது.  2015 முதல் கச்சா எண்ணெய் விலை, ஒருபுறம் சரிந்துகொண்டே வந்தாலும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் மட்டுமே உள்ளதை தவிர விலையில் வீழ்ச்சி ஏற்படவில்லை. இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்றது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் மூலமாக மக்கள் அடைய வேண்டிய பலனை அபகரித்து, அம்பானி உள்ளிட்ட தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதோடு, பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக குறைத்தும், உயர்த்தப்பட்ட கலால் வரியை ரத்து செய்தும், அதன் பலல் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள இந்த பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகின்றது.

9. நகர்புற உள்ளாட்சி மற்றும் எஞ்சியுள்ள ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கான  தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்:

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தை இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

10. ஏழு தமிழர்கள் உட்பட முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்:

தமிழக அரசு சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் பாரபட்சம் காட்டாமல் 10 ஆண்டுகள் கழிந்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்திட வேண்டும். மற்ற கைதிகளைப் போல முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியமாக்க வேண்டும். ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநரின் ஒப்புதலை பெற தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தரவேண்டும் எனவும் இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

11.வக்பு வாரிய நிர்வாகத்தை விரைவாக அமைக்க வேண்டும்:

தமிழக வக்பு வாரியத்திற்கான முறையான நிர்வாகம் அமைக்கப்படாமல் தனிச்செயலாளர் மூலம் இயக்கப்பட்டு வருகின்றது.  முறையான நிர்வாகம் கட்டமைக்கப்படாத காரணத்தால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரியத்தின் சொத்துக்களை நிர்வகிப்பதிலும், இஸ்லாமிய மக்களின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய வக்பு வாரியத்தின் திட்டங்கள் பல தமிழகத்தில் செயல்படுத்தபடாமல் உள்ளன. பலகோடி மதிப்புள்ள வக்ப் சொத்துக்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. ஆகவே, விரைவாக வக்பு வாரியத்திற்கான நிர்வாகத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

12. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சங்பரிவார் அமைப்புகளின் வெறுப்பு பிரச்சாரம்: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக  

அரசமைப்பு சட்ட விரோத சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும், தமிழகத்தின் அமைதியான சூழலை கெடுக்கும் விதத்திலும்  பாஜக, இந்துத்துவ சக்திகள் கோவையில் கலவரச் சூழலை ஏற்படுத்தும் வகையில், மத ரீதியான தாக்குதல்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களும், தாக்குதல்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துவக்கத்திலேயே இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் மெத்தனப் போக்கை காட்டாமல், உடனடியாக அத்தகையவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொண்டு, இருப்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்த பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.

13. கொரானோ வைரஸ் தாக்குதல் - மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் இந்தியா உள்பட 118 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 2 உயிர் பலிகள் உள்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் சுமார் 85 பேரும், உலகம் முழுவதும் சுமார் 1.25 லட்சம் பேரும் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  கொரோனா வைரஸ் தாக்குதலை ‘பாண்டமிக் - Pandemic’ எனும் கட்டுப்படுத்த இயலாத வகையில் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலில் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் இந்த வைரஸ் தாக்கத்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஆகவே, இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும் என இந்த பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக