இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு வழக்கு தொடுக்க வேண்டும்!
இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கென்று சட்டம் இயற்ற வேண்டும்!
ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும்!
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மற்றும் அயல்நாடுகளில் உயர்கல்வி படிப்பதற்கான நிதி உதவியை வழங்க வேண்டும்!
சமூகநீதி அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்
(13-03-2020) நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!
"சமத்துவத்தை வென்றெடுப்பதே சமூக நீதியின் நோக்கம். எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு நீதி கிடைக்க, அதன் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட இந்த துறை பாடாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமூகநீதிக்குக் குழித் தோண்டும் வகையில், இங்கே நீதிமன்றங்கள் உட்பட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. உத்ரகாண்ட் அரசுக்கும், முகேஷ் குமார் என்பவருக்கும் இடையேயான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் “வேலைவாய்ப்பு என்பது அடிப்படை உரிமையில்லை. மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, நீதிமன்றம் அப்படி ஆணையிட முடியாது” என்ற தீர்ப்பை வழங்கியது.
இதுகுறித்து அண்மையில் நமது சமூகநீதித்துறை அமைச்சர் மாண்புமிகு கலோட் அவர்களை நேரிலே சந்தித்து மனு கொடுத்தோம். உத்தரகாண்ட் அரசு மற்றும் முகேஷ்குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது, வேலைவாய்ப்பை பறிக்கக்கூடியது. ஆகவே, உடனடியாக மத்திய அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கை தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
இதுகுறித்து, 1976ல் கேரள மாநில அரசுக்கும் என்.எம்.தாமஸ் ஆகியோருக்கும் இடையிலான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட constitution bench அளித்த தீர்ப்பு ஆர்ட்டிகிள் 16 குறித்து விளக்குகிறது.
“Article 16 will have to read as whole and article is not an exemption but merely a more emphatic statement of concordant and principle stated in 16/1”.
16/1, 16/4 ஆகியவற்றை ஒரே செக்சனாக இணைத்துப்பார்க்க வேண்டும். அப்படி பார்க்கிறபோது, வேலைவாய்ப்பு என்பது கட்டாயமான ஒன்று;
மத்திய, மாநில அரசுகள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.
7 பேர் (நீதியரசர்கள்) கொண்ட constitution bench வழங்கிய தீர்ப்பு முதன்மையானது, அடிப்படையானது, வலிமையானது. ஆனால், அண்மையில் வழங்கிய தீர்ப்பு அதற்கு எதிரானது. இது வேலைவாய்ப்பை, சமூக நீதியை கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதால் மத்திய அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தொடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கென்று சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்; அதனை அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அடுத்து, உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தேசிய சட்ட ஆணையம் தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ள “வெறுப்புக்குற்றங்கள்” தொடர்பான மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இன்றைக்கு நாட்டில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது. அதனால், வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிற வெறுப்புக் குற்றங்கள் தொடர்பான மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்று நான் மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு ‘நிதி ஆயோக்’ கொண்டு வந்ததன் மூலம் scheduled caste sub plan, tribal sub plan ஆகிய துணைத் திட்டங்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. இதனால் எஸ்.சி., எஸ்.டி.,மக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே போகிறது. எனவே, ஆந்திராவில் எப்படி இதற்கென்று ஒரு சட்டம் இயற்றியிருக்கிறார்களோ அதேபோல, மத்திய அரசும் இதற்கென சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஆணவக்கொலைகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. உச்சநீதிமன்றம் இதற்கென சட்டம் இயற்றும்படி உத்திரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. எனவே, ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், இத்தனைக் காலமும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு post matric scholarship வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு அந்த நிதி வழங்குவதை நிறுத்திக்கொண்டதனால் மாநில அரசுகள் அதை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் அயல்நாடு சென்று உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பும் இப்போது பறிபோய்க்கொண்டிருக்கிறது. எனவே, தயவுகூர்ந்து post matric scholarship மற்றும் அயல்நாடுகளில் உயர்கல்வி படிப்பதற்கான நிதி உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தலித்துகள் இந்த நாட்டில் ஒடுக்கப்படுவது மட்டுமின்றி தலித் ஆதரவாளர்களும் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள். ‘பீமா கோரேக்கான்’ வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்ந்து சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளது. மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு ஜாமின் வழங்க முன்வந்த நிலையில் அந்த வழக்கு ‘தேசிய புலனாய்வு அமைப்பின்’ கீழ் மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்வதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக