தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களை துணைவேந்தராக நியமிப்பது என்ன நியாயம்?
- திரு. க.பொன்முடி
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. மாநில உரிமையைப் பறிக்கும் விதத்தில் இன்று கல்வியை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சி நடைபெறுகிறது. மத்திய அரசு நமது மாநிலத்தில் பா.ஜ.க கொள்கைக்கு ஆதரவான கல்லூரிகளை அமைத்து கல்வியை ஆக்கிரமிப்பு செய்கிறது.
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கொண்டுவருவதாகக் கூறிவிட்டு பிறகு ரத்து செய்வது துக்ளக் அறிவிப்பாக இருக்கிறது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றால் குழந்தைகள் பள்ளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும் எனக் கடுமையாகக் கூறிய பிறகே அந்த பொதுத் தேர்வை ரத்து செய்தீர்கள்.
கலைஞர் ஆட்சியில்தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர்கல்வி கொண்டுவரப்பட்டபோது 2011 - 2012ம் ஆண்டு நேஷனல் அச்சீவ்மென்ட் ஆய்வில் தமிழகம் கல்வித் தரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
ஆனால் 2017 - 18ம் ஆண்டு 8-வது இடத்திற்கு கல்வித்தரம் கீழே இறங்கி உள்ளது. இதுதான் உங்கள் ஆட்சியில் கல்வித் தரத்தை உயர்த்துவதா
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. 2009 - 10ம் ஆண்டில் 28.60 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை, 2015 -16 ஆம் ஆண்டு 17.45 லட்சமாக குறைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை என்பது அதிகரித்தது.
அவர் மாநகர அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி வைத்திருந்தார். இப்போது அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்ததன் விளைவாக மாணவர்களின் சேர்க்கை என்பது குறைந்துள்ளது
அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மத்திய அரசு தலையீடு இருக்கக்கூடாது. அதன் பெயரை மாற்றக்கூடாது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ்தான் இருந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுசெல்லப்பட்டன.
கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் உங்கள் ஆட்சியில் அனைத்தையும் ஒன்று சேர்த்து தற்போது அண்ணாவின் பெயரை மறைப்பதற்காக முயற்சி எடுத்து வருகிறீர்கள்
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கலைஞர் பகுதி நேர ஆசிரியர்களை 58,000 நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்தார். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 16 ஆயிரம் பேரில் 4,000 பேர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள். 12 ஆயிரம் பேர் இப்போது பகுதி நேர ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
மூன்று மாதத்திற்கு முன்பாக கமிட்டி போட்டு அவர்களை நிரந்தர ஆசிரியர்களாக செய்யப்படும் என்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் நடைபெற்றபோது சிட்டிங் கமிட்டி என்று ஒன்றை இந்த அரசு அறிவித்தது. அதன் அறிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஸ்ரீதர் கமிட்டி என்ற ஒன்று அமைத்தது; அதுவும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. போராடிய அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இந்த பிரச்னைகளின் இப்போதைய நிலை என்ன?
மாணவர்களைக் கட்டுப்படுத்த தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களை துணைவேந்தராக நியமிப்பது என்ன நியாயம்? இதேபோல் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர் நியமிக்கப்பட்டார். இது என்ன நியாயம்?
தமிழகத்தில் தகுதியுடைய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் நியமிக்காமல் டெல்லியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களை துணைவேந்தர்களாகவும், தேடுதல் குழு உறுப்பினர்களாகவும் நியமித்திருப்பது நியாயமில்லை. அதுகுறித்து ஆளுநரிடம் கேள்வி கூட கேட்காமல் அ.தி.மு.க அரசு மௌனமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக