வெள்ளி, 13 மார்ச், 2020

ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் வேண்டும் ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது - தொல்.திருமாவளவன்


" மீண்டும் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் வேண்டும் 
ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது" 
- நாடாளுமன்றத்தில் ரயில்வே மானியக் கோரிக்கை 
மீதான விவாதத்தில்  தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 

நாடாளுமன்றத்தில் ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள்  “வழக்கும் போல் மீண்டும் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்பதை நான் முதலில் வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டாவது ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது. அப்படி ஒரு முயற்சி இருக்குமேயானால் அந்த முயற்சியை கைவிட்டுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வழக்கமாக தென்னக ரயில்வே இந்த நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. புதிய வழித்தடங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட வழித்தடங்களுக்கும் போதிய நிதி அளிக்கவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.  

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் புதிய பணியமர்த்தம் செய்கிறபோது, தமிழ்நாட்டை சாராதவர்கள் பணியமர்த்தம் செய்யப்படுகிறார்கள். இதனால், தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுதலிக்கப்படுகிறது. ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பயணிகளுக்கான சேவையையும் நிறைவாக செய்யாத  நிலையும் உள்ளது. தமிழ் மொழி தொியாத அதிகாரிகள் அங்கே பணியமர்த்தம் செய்யப்படுவதால், உத்தரவுகளை பிறப்பிக்கிறபோது, அது சரியாக புரிந்துகொள்ளப்படாமல் விபத்துக்களும் நடக்கிறது. எனவே, அந்தஅந்த மாநிலங்களில் பிராந்திய மொழியை அறிந்த அதிகாரிகளை நியமனம் செய்வது அவசியம் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய நான் கடமைப்பட்டிருகிறேன். கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையில் இருந்து கடலூர் வரையிலான ரெயில் பாதை அமைப்பதற்கான ஒரு திட்டம் கடந்த முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு கைவிடப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டுக்கு இது பெரும் நட்டத்தையும், போக்குவரத்து சிக்கலையும் ஏற்படுத்துகிறது. எனவே, அந்த கைவிடப்பட்ட வழித்தடத்தை மீண்டும் அமைப்பதற்குரிய நடவடிக்கையை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

சிதம்பரம் ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். குறிப்பாக நடராஜர் ஆலயம் அங்கே உள்ளது. அதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்லுகிற இடம். எனவே, சிதம்பரம் ரயில்வே நிலையத்தை ஒரு ஜங்ஷனாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதற்காக சிதம்பரத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் வழியாக சேலம் செல்வதற்கான  ஒரு புதிய வழித்தடத்தை  அமைக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரிடத்திலே கோரிக்கை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். 

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிஷான் ரயிலை சென்னையில் இருந்து சிதம்பரம் வழியாக திருச்சி வரையில் விட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 

சென்னையில் இருந்து சிதம்பரம் வழியாக தேஜாஸ் என்னும் விரைவில் ரயில் விட வேண்டும் என்கிற வேண்டுகோளையும் வைக்கிறேன். மேலும், பைசாபாத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையில் இயங்கி வந்த ரயில் சிதம்பரத்தில் நிற்காமல் செல்கிறது. ஏராளமான பயணிகள் அங்கே இறங்குவதற்கான தேவை இருக்கிறது. அந்த ரயில் சிதம்பரத்தில் நின்று செல்லக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். 

தஞ்சாவூரில் இருந்து அரியலூருக்கு இடையே எந்த ஒரு ரயில் பாதையும் அமைக்கப்படவில்லை. எனவே, அங்கு ஒரு புதிய ரயில் தடத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருச்சியில் இருந்து பெங்களூர் வரையில் இயங்கி வந்த விரைவு ரயில் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அரியலூர், விருத்தாச்சலம் வழியாக மீண்டும் அந்த விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை வைக்கிறேன். சேலம், விருத்தாச்சலம் வரையில் செல்லும் பயணிகள் ரயில் அதனை அரியலூர் வரையில், என்னுடைய தொகுதி ஒரு முக்கியமான பகுதி அதனால்  அரியலூர் வரையில் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல சென்னையில் இருந்து இயக்கப்படுகிற அனைத்து சிறப்பு ரயில்களும் அரியலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் நின்று செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிற அதே வேளையில் தனியார் மயமாக்குதல் என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் வேலைவாய்ப்பை பெறக்கூடிய எளிய மக்களுக்குரிய வாய்ப்பு பறிக்கப்படும். 

உலகளாவிய அளவில் இந்திய ரயில்வே என்பது புகழ் பெற்ற ரயில்வே. மிகப்பொிய துறை எனவே, அதை எக்காரணத்தை முன்னிட்டும் தனியாருக்கு ஒப்படைக்கிற முயற்சியை மேற்கொள்ளக்கூடாது . அதை முற்றிலும் கைவிட வேண்டும்  என மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். " என உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக