ஞாயிறு, 1 மார்ச், 2020

ஈரான் மற்றும் பல தீவுகளில் உள்ள இந்திய மீனவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் மீட்க வேண்டும் - ஜி.கே.வாசன்


ஈரான் மற்றும் பல தீவுகளில் உள்ள இந்திய மீனவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் மத்திய அரசு உடனடியாக விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். - ஜி.கே.வாசன்

ஈரான் மற்றும் அருகில் உள்ள சில தீவுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 900 இந்திய மீனவர்கள் நாடு திரும்புவதற்கு உண்டான விரைவு நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று என்பதால் அங்குள்ள இந்திய மீனவர்கள் நாடு திரும்ப கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் அந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். தமிழகத்தில் இருந்து சுமார் 400 க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்ய ஈரான் நாட்டில் தங்கியுள்ளனர். இவர்களில் சுமார் 300 க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள்.

தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கின்ற காரணத்தால் வெளிநாட்டுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் நாடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

ஈரான் மற்றும் வளைகுடாவில் பல்வேறு தீவுகளில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் எவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வரவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

மேலும் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த அனைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்ற மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக