திங்கள், 9 மார்ச், 2020

வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்! உண்மை அறியும் அறிக்கை


வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்! - SDPI மத்தியக் குழுவின் உண்மை அறியும் அறிக்கை
வடகிழக்கு டெல்லியில் அரசமைப்புக்கு விரோதமான சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக ஜப்ராபாத் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்திற்கு எதிராக, கபில் மிஸ்ரா தலைமையிலான பா.ஜ.க.வினர் கடந்த 23 ஆம் தேதி சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வன்முறையில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.


இந்நிலையில், கலவரம் பாதித்த பகுதிகளான ஜப்ராபாத், முஸ்தபாபாத், ஷிவ் விகார் உள்ளிட்ட பகுதிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு, தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி தலைமையில் பார்வையிட்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்டு, உறவினர்களை இழந்து , உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் கூறியது.

இரண்டு நாட்களாக இந்தக் குழு கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது. இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தேசியச் செயலாளர்கள் டாக்டர் தஸ்லீம் ரெஹ்மானி, டாக்டர் ஆவாத் ஷெரீப், தேசிய செயலகக்குழு உறுப்பினர் அப்துல் சத்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வீடுகள், நிறுவனங்கள், மசூதிகள், கடைகள் மற்றும் மதரஸா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்ற இந்த ஆய்வுக்குழு அங்குள்ள மக்களை சந்தித்து கலவரம் குறித்த விவரங்களை சேகரித்தது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி கலவரம் பாதித்த பகுதிகளை பார்க்கும் போது, இது திட்டமிடப்பட்ட வன்முறை வெறியாட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.

முஸ்லிம்களின் வீடுகள், மசூதிகள், மதரஸாக்கள், நிறுவனங்கள் தாக்கப்பட்டு, எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. பாதித்த பகுதிகளை பார்வையிடும் போது, முஸ்லிம்களின் வீடுகள் இருக்கும் பகுதிகளில் இருக்கக்கூடிய இந்துக்களின் வீடுகள் அனைத்தும் தாக்குதலில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே, இந்த கலவரம் கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், கத்தி, கம்பி, கம்புகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும் உள்ளூர் பகுதி சங்பரிவார்களுடன் இணைந்து, வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட வன்முறை கும்பல், தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளதை அறிய முடிகிறது.

நான்கு நாட்கள் நடந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு கணக்கு சொன்னாலும், பலரையும் காணவில்லை என்று காவல்துறையினரிடமும், மருத்துவமனையின் பிணவறையிலும் அப்பகுதி மக்கள் தேடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

முஸ்தபாபாத் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் ஏறத்தாழ 250 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஷிவ் விகார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த ஷிவ் விகார் பகுதி முற்றிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வீடுகள் திட்டமிட்டு இந்த பகுதி முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பயிற்சி பெற்ற, கலவரத்துக்கென்றே தயார் செய்யப்பட்டுள்ளவர்கள் என்பதை, கலவரம் பாதித்த பகுதிகளை பார்க்கும் போது தெரிகிறது. நிச்சயம் இது உளவுத்துறை மற்றும் அரசுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.

மேலும், இந்த கலவரங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கக்கூடிய, வெறுப்புப் பேச்சுக்களுக்கு உரியவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். ஆனால், இவர்களை கைது செய்வதில் இன்னும் அரசு மெத்தனம் காட்டியே வருகிறது.

இந்த கலவரத்தில் காவல்துறையின் உதவியுடனும், சில பகுதிகளில் காவல்துறையினரே கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் பாதிக்கப்பட்ட மக்களின் கலவரம் குறித்து விவரிக்கும் செய்திகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

காவல்துறையினரின் உதவி இல்லாமல், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பே இல்லை என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் போது, "முதலில் கலவரக்காரர்கள் எங்கள் பகுதிக்கு வந்தனர். ஆனால், அவர்களை நாங்கள் விரட்டி விட்டோம். பின்னர் காவல்துறையின் உதவியுடன், கலவரக்காரர்கள் மக்களை தாக்க ஆரம்பித்தார்கள். தீ வைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி நிறுவனங்களை தாக்கினார்கள்." என தெரிவித்தனர்.

கும்பலாக மக்களை அடித்துக் கொல்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் என்று, டெல்லி காவல்துறையினர் கலவரக்காரர்களுடன் இணைந்து பாரபட்சமாகவே நடந்துள்ளனர். இதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், ஷிவ் விகார் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இதுவரை 11 உடல்கள் கண்டெக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் முஸ்லிம்களின் உடல்களே ஆகும். இன்னும் காணாமல் போனவர்களின் உடல்களும் இங்கு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வளவு நடந்தும் கலவரக்காரர்கள் மீது, காவல்துறையினர் ஒரு சிறு தடியடி பிரயோகத்தைக் கூட நடத்தவில்லை. இப்போதும் கூட காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நோக்கியே இருக்கிறது. கலவரம் குறித்து பேசுபவர்களையும், ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுப்பவர்களையும் மிரட்டுவது, அல்லது அவர்கள் மீது வழக்கு போடுவது என்று, ஒரு தலைபட்சமான நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது.

சில இடங்களில் உள்ளூர் பகுதி மக்கள் கலவரக்காரர்களை விரட்டி மக்களை பாதுகாத்துள்ளதையும், பல இடங்களில் கலவரக்காரர்களின் தாக்குதலை அவர்கள் வேடிக்கை பார்த்த நிகழ்வுகளையும் நேரடி கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

கலவரத்தில் துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் மரணமடைந்தவர்களில் பலரும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல் காயமடைந்தவர்களில் ஏராளமானோர் துப்பாக்கி குண்டுகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, ஷாஹின் பாக், டெல்லி ஜாமிஆ பல்கலைக்கழக போராட்டங்களிலும் துப்பாக்கியால் சுட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஆகவே, வன்முறைக் கும்பலிடம் சர்வ சாதாரணமாக துப்பாக்கிகள் புழங்குவது என்பது மிகவும் ஆபத்தானது. ஆகவே, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்தியக் குழு கேட்டுக்கொள்கிறது.

கீழ்க்காணும் விஷயங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்தியக் குழு கோரிக்கைகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு முன்வைக்கிறது

1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது போல், 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

2. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசே வீடுகள் கட்டி, சேதம் ஏற்பட்ட வீடுகளை அரசே சீரமைத்து கொடுக்க வேண்டும். மேலும், சேதமாக்கப்பட்ட மதரஸாக்கள், மசூதிகள், பொது நிறுவனங்களை அரசு உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.

3. இந்த கலவரத்திற்கு காரணமான வெறுப்பு பேச்சுக்களை பேசிய கபில் மிஷ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் மிஷ்ரா உள்ளிட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பது என்பது வேதனையான ஒன்றாகும்.

அதேப்போன்று, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த கலவரத்தை தடுக்க தவறிய காவல்துறை மீதும், கலவரத்திற்கு உடந்தையாக இருந்த காவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. அதோடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம்களை நோக்கிய கண்மூடித்தனமான கைதுகள் (arbitrary arrest) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.

5.மேலும், கலவரங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை பாதுகாத்து (preserve) வழக்கிற்கான ஆவணமாக காவல்துறை உபயோகப்படுத்த வேண்டும்.

கலவரம் குறித்து வெளிவந்துள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சில பகுதிகளில் காவல்துறையினரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. அதுக்குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. கலவரத்தில் கடைகள் இழந்து, தங்களுடைய நகைகள், பணங்கள் இழந்து, வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு நிர்கதியற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய நிர்வாகிகள் குழு கேட்டுக் கொள்கிறது.

7. உலகமே அச்சத்தோடு பார்க்கிற அளவுக்கு மிகப்பெரும் தாக்குதல்கள் ஒரு சமூகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய மாநில முதல்வர் கெஜ்ரிவாலோ, பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ உடனடியாக நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும், அவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாததும் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது.

எனவே, மாநில முதல்வரும் உள்துறை அமைச்சரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்றும் இந்த குழு கேட்டுக் கொள்கிறது.

8. அதோடு, கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நிவாரண முகாம்கள் அமைத்து, பாதுகாப்புகளை பலப்படுத்தி, வெளியேறிய மக்கள் மீண்டும் சொந்த குடியிருப்புகளுக்கு செல்லவும், மக்களிடம் கலவரம் குறித்த அச்சம் போக்கப்படவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நல்லிணக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, கலவரம் பாதித்த பகுதிகளில் மக்களிடையே அமைதி ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

9. காணாமல் போனவர்களை உறவினர்களின் உதவியுடன் கண்டுபிடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக