சனி, 7 மார்ச், 2020

காங்கிரஸ் நண்பர்களும் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். - கே.எஸ். அழகிரி


சென்னை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து காங்கிரஸ் நண்பர்களும் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். - கே.எஸ். அழகிரி

மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, தலைநகர் தில்லியில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தங்கள் உடமைகளை இழந்திருக்கிறார்கள். இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் முறையிட்டனர். ஆனால், இதுகுறித்து விவாதிப்பதற்கு பா.ஜ.க.வினர் தயாராக இல்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான திரு. மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருக்கிறார். இதைவிட ஜனநாயக விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.


நாட்டு மக்கள் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதுகுறித்து விவாதிக்கும் மிக உயர்ந்த அமைப்பாக பாராளுமன்றம் விளங்குகிறது. ஆனால், பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாமல் இத்தகைய விவாதங்களை தவிர்க்க வேண்டுமென்று விரும்புகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரியாகவே நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

நாடாளுமன்றத்தின் எந்த விவாதங்களிலும் பங்கேற்பதில்லை. அப்படியே பங்கேற்று உரையாற்றினாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட முடியாது, கேள்வி கேட்க முடியாது. ஜனநாயகத்தின் அடித்தளமே கருத்து மோதல்கள் தான். இதன்மீது நரேந்திர மோடிக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவர் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார்.

இந்திய ஜனநாயக வரலாற்றில் பத்திரிகையாளர் சந்திப்பில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிற நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது மிகுந்த துரதிருஷ்டவசமானதாகும். இத்தகைய போக்கு கொண்டவராக இருப்பதால் தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக விரோதச் செயலை கண்டிக்கும் வகையில் வடசென்னை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. எம்.எஸ். திரவியம் தலைமையில் திங்கள்கிழமை (9.3.2020) காலை 11 மணியளவில் தண்டையார்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து காங்கிரஸ் நண்பர்களும் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக