என்.பி.ஆர். நடவடிக்கைகளை தமிழகத்தில் ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே சிறந்த முடிவாகும்!
- தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் என்.பி.ஆர். மக்கள் தொகை பதிவேட்டு கணக்கெடுப்பை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக, செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், சட்டமன்ற தீர்மானம் மூலமாக அந்த அறிவிப்பு முதல்வரின் அறிவிப்பாக வெளிவர வேண்டும் என்பதே எஸ்.டி.பி.ஐ. உள்பட போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆனால், போகிற போக்கில் பேசிவிட்டு செல்வது போல, என்.பி.ஆர். கணக்கெடுப்பால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அது எதிர்கட்சிகள் செய்துவரும் அரசியல் தூண்டுதல் எனவும், அதன் காரணமாகவே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருவது போலவும், மக்களின் நியாயமான போராட்டங்களை கொச்சைப்படுத்திவிட்டு அந்த அறிவிப்பை பேட்டியின் சாரம்சத்தின் ஒருபகுதியாக தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்புக் கூட மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலானது அல்ல. மத்திய அரசுக்கு அளித்த கடிதத்தின் பதில் வராத காரணத்தால் தான் என்பதையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது மக்களின் போராட்ட உணர்வுகளை புரிந்துகொள்ளாத, அதேவேளையில் ஏமாற்றும் அறிவிப்போ என்ற கேள்வியும் எழுகிறது.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. குறித்த முழுபுரிதலுடன் தான் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகின்றார்கள். அவர்களை எந்த எதிர்கட்சிகளும் தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை. அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் முதற்கொண்டு என்.பி.ஆர்.க்கு எதிராக பல கட்சி தலைவர்களும் அறிக்கை அளித்துள்ளார்கள். ஆகவே, மக்களின் போராட்டத்தை எதிர்கட்சிகளின் தூண்டுதல் என்று அமைச்சர் மீண்டும் மீண்டும் கொச்சைப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
என்.பி.ஆர். தான் என்.ஆர்.சியின் முதல்படி, என்.ஆர்.சி. நடவடிக்கைகளுக்கு என்.பி.ஆர். தரவுகளிலிருந்து தகவல்களை அளிக்கலாம் என்று விதிகள் உள்ளதால் என்.பிஆர். நடவடிக்கைகளை தமிழக அரசு புறக்கணிப்பதுதான் சிறந்த முடிவாக இருக்க முடியும்.
ஆகவே, தமிழக அரசு மக்களின் கோரிக்கை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்.பி.ஆர். நடவடிக்கைகளை தமிழகத்தில் ரத்து செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக