வெள்ளி, 13 மார்ச், 2020

டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்கள் கைது! - SDPI கட்சி கடும் கண்டனம்


டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்கள் கைது! 
- எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி, டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் தேவையற்ற அடக்குமுறையையும், அவர்களின் கைது நடவடிக்கையையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி விடுத்துள்ள அறிக்கையில், டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது பர்வேஸ், செயலாளர் முஹம்மது இல்யாஸ் மற்றும் பலரை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்ததை அவர் கடுமையாக விமர்சித்தார்.


பாப்புலர் ஃப்ரண்ட் மீது நடத்தப்படும் இந்த சூனிய வேட்டைக்கு காரணம் அரசியல் பழிவாங்கலும், வகுப்புவாத வெறுப்பு மட்டுமே என்றும், இந்த நாட்டின் நேர்மையான சிந்தனை கொண்ட அனைத்து குடிமக்களும், ஜனநாயக அமைப்புகளும் இந்த அடக்குமுறையைக் கண்டிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

டெல்லி கலவரங்களுக்கு உண்மையில் காரணமானவர்கள் ஆளும் பாஜக கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் சுதந்திரமாக உலாவந்து கொண்டிருப்பதோடு அல்லாமல், குற்றவாளிகளாக இருந்தும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதோடு, மேலும் உயர்தர ஒய் பிரிவு பாதுகாப்பை அனுபவித்துவரும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், சமூகச் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை டெல்லி காவல்துறை வழக்குப் பதியாமலிருப்பது ஏன்? என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

மேலும், டெல்லி கலவரங்கள் சம்மந்தமாக நாடாளுமன்ற விவாதத்திற்கு நேற்று பதில் அளித்த உள்துறை அமைச்சர், கலவரங்கள் உருவாக, "சுடு", "கொல்" என்று வெளிப்படையாக வெறுப்பை உமிழ்ந்து சட்டம் ஒழுங்கை சீரழித்து கொடூரப் படுகொலைகளுக்கு காரணமான தம் அமைச்சரவை சகா அனுராக் தாக்கூர், அவர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா மற்றும் டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போன்றவர்களின் பெயர்களைக்கூட குறிப்பிடாமல் போனதை டாக்டர் ரஹ்மானி விமர்சித்தார். அதற்கு மாறாக உள்துறை அமைச்சர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அங்கம் வகித்த நாட்டின் மக்கள் நல அமைப்புகளை குறைகூறுவதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார்.

அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடுவது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமையாகும் என்றும், அதை தேசவிரோதச் செயலாகக் கருதமுடியாது என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய செயலாளர் குறிப்பிட்டார்.

அமைதி வழியில் போராடும் மக்களை கைது செய்வது இப்போதைய அரசின் பாசிசப் போக்கையே உணர்த்துகிறது என்றார் அவர்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் மத்திய அரசு காவல்துறையை ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

சட்டம் ஒழுங்கை மதிக்கும் இந்தியக் குடிமக்கள் மற்றும் குறிப்பாக குறிவைத்துத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, பணியிலிருக்கும் உயர்மட்ட நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து, கலவரங்களுக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களை கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பல்வேறு பொய்வழக்குகளில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, காவலில் வைக்கப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் பிற அப்பாவி மக்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக