ஞாயிறு, 4 ஜூலை, 2021

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த பெரும் ஊழலில் இரு தரப்பிற்கும் பெரும்பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.- எம்.கே.பைஸி

 ரஃபேல் ஒப்பந்த ஊழலினை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் மூலம் விசாரிக்க வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் வலியுறுத்தல்

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த பெரும் ஊழலில் இரு தரப்பிற்கும் பெரும்பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் ‘தேசப் பாதுகாப்பு’ என்று கவசமிட்டு இந்த ஊழலை மறைக்க இயலாது. ஆகவே ரஃபேல் ஒப்பந்த ஊழல் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்ற விவகாரத்தில் பல பில்லியன் டாலர் ஊழல் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் காணப்படுவதனை தொடர்ந்து, அதனை விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் ஒரு நீதிபதியை நியமித்துள்ளது. இதன் மூலம் ரஃபேல் ஒப்பந்தத்தில் நிகழ்ந்துள்ள பெரும் ஊழலை நாம் எளிதில் உணர முடியும் என தெரிவித்துள்ளார்.

எவ்வித முன்அனுபவமுமற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் மூலம் டசால்ட் ஏவியேஷனில் இருந்து ரூ.526 கோடி மதிப்புள்ள போர் விமானம் ரூ.1670 கோடிக்கு என மதிப்பு கூட்டி காட்டப்பட்டு மொத்தம் 36 போர் விமானங்களை ரூ.60,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள நிகழ்வு பல கேள்விகளை எழுப்புகிறது. ஒவ்வொரு ஃபைட்டர் ஜெட் விமானமும் ரூ.1144 கோடி ரூபாய் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதன் மூலம் ரூ.41,000 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்து ஏன் வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்த நாட்டு மக்களுக்கு இன்றுவரை மோடி அரசு பதிலளிக்கவில்லை. ரஃபேல் ஒப்பந்ததின் வாயிலாக விமானங்களை வாங்குவதற்காக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தை ஒப்பந்ததிலிருந்து வெளியேற்றிவிட்டு, அதற்கு பதிலாக இந்த துறையில் எந்த முன்அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் குழுமத்தினை இணைத்தது ஏன்? என்ற கேள்விக்கும் மோடி அரசிடம் எந்த பதிலும் இல்லை.

ஃபைட்டர் ஜெட் விமானங்களின் உதிரிபாகங்களை இந்தியாவில் வைத்து ஒருங்கிணைப்பதன் மூலம் அதன் தொழில்நுட்பத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அளிப்பதாக முந்தைய அரசு அந்நிறுனவனத்துடன் செய்திருந்த ஒப்பந்ததை மோடி அரசு ரத்து செய்ததினால், நம் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஃபேல் ஊழல் குறித்து விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் ஒரு நீதிபதியை தற்போது நியமித்துள்ள நிகழ்வானது, இந்த ஒப்பந்தத்தில் சந்தேகப்படும்படியான பரிமாற்றங்களும், மோசமான பேரங்களும் நடந்துள்ளன என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும் என்று பைஸி  குறிப்பிட்டு காட்டினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்த கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்காக மோடி அரசு ‘தேசப் பாதுகாப்பு’ என்ற போர்வையில் ஒளிந்துகொண்டது. இத்தகைய விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்காக ‘தேசப் பாதுகாப்பு’ எனும் கவசத்தினை பயன்படுத்தும் வழிமுறையே கூட நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும். மேலும், இந்திய மக்களால், ரஃபேல் ஒப்பந்த ஊழலின் வாயிலாக ஏற்பட்டுள்ள மிகப்பெரும் இழப்பினையும் சகித்துக்கொள்ள முடியாது, அதுபோல தேசத்தின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இழைக்கப்படும் தவறுகளிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். ஆகவே, இந்த ஊழல் குறித்து விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பைஸி வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக