ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

'ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன்' தமிழகத்தின் பாலகங்காதர திலகர் வ.உ. சிதம்பரம் பிள்ளை.- வானதி சீனிவாசன்


 'ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன்'

தமிழகத்தின் பாலகங்காதர திலகர் வ.உ. சிதம்பரம் பிள்ளை

வங்காளத்தில் விபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய், மராட்டியத்தில் பாலகங்காதர திலகர் என்றால் தமிழகத்தில் வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை.  அவரது பெயரைக் குறிப்பிடாமல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை யாராலும் எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் வ.உ.சி.

1872 செப்டம்பர் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதப் பிள்ளை - பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். பாலகனாக இருந்த போதே படிப்பில் ஆர்வம் காட்டிய வ.உ.சி., தந்தையைப் போலவே வழக்கறிஞராக பட்டம் பெற்றார். வழக்கறிஞராக தொழில் செய்தாலும் அவரது மனம் தத்துவத்திலும், ஆன்மிகத்திலும் திளைத்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகமூட்டியவர் சுவாமி விவேகானந்தர். மகாத்மா காந்தி உள்ளிட்ட பலரும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டவர்களே. தமிழகத்தில் மகாகவி பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகிய ஆகிய மூன்று தேச பக்தர்களும் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக, தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.

இளைஞராக இருந்தபோது சிவ பக்தியில் திளைத்தார் வ.உ.சி.. வள்ளிநாயகம் என்ற துறவியிடம் 'கைவல்யம்’, 'விசார சாகரம்' ஆகிய வேதாந்த நூல்களை கற்றார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான சுவாமி இராமகிருஷ்ணானந்தரை 1897-ம் ஆண்டு சென்னையில் வ.உ.சி. சந்தித்தார். இந்தச் சந்திப்பு அவரது வாழ்வில் பெரும்  மாற்றத்தை ஏற்படுத்தியது. 

 “சுதேசியம் பரவி வரும் இந்தப் பூமியில் கைத்தொழில் வளர்ப்பதற்கு என்ன முயற்சி செய்தாய்?” என்று வ.உ.சி.யிடம் சுவாமி இராமகிருஷ்ணானந்தர் எழுப்பிய கேள்விதான் அவரை சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்க வைத்து, 'கப்பலோட்டிய தமிழர்' ஆக்கியது. இந்தச் சந்திப்பு பற்றி தனது சுயசரிதையில் வ.உ.சி. விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். இந்த நாட்டின் ஆன்மிகத் தலைவர்கள் தகுதியும், திறமையும் கொண்டவர்களைக் கண்டறிந்து எப்படியெல்லாம் தேசத்திற்கு உழைக்க அனுப்பியிருக்கிறார்கள் என்பதற்கு சுவாமி இராமகிருஷ்ணானந்தர் -  வ.உ.சி. வாழ்வே சிறந்த உதாரணம்.

வ.உ.சி.யை சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமே சுருக்கிவிட முடியாது. வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், ஆன்மிகவாதி, தத்துவ அறிஞர், மொழிபெயர்ப்பாளர், தொழிலதிபர் என்று பல்வேறு தளங்களில் நாட்டுக்காக உழைத்தவர் அவர். அதனால் வ.உ.சி.யை "ஒப்பே கூற முடியாத செந்தமிழ் அறிவுச்செல்வன்" என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாராட்டினார். 

"சிதம்பரம் பிள்ளையின் மேடை சொற்பொழிவு முழக்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்தப் பிணம் கூட உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும்" என்று வழக்கு ஒன்றில் தீர்ப்பெழுதும்போது ஆங்கிலேயே நீதிபதி ஃபின்ஹே குறிப்பிட்டார். வ.உ.சி.யின் தீரத்தை, வீரியத்தை விளக்க இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

1906 நவம்பர் 12-ம் தேதி 'பிரிட்டீஷ் ஸ்டீம் நேவிகேஷன்' என்ற ஆங்கிலேயர்களின் நிறுவனத்திற்குப் போட்டியாக 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' என்று கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் வளர்ச்சி மக்கள் மனதில் சுதந்திரப் போராட்ட உணர்வை  அதிகரிக்கச் செய்தது. தமிழக மக்களிடம் ஏற்பட்ட சுதந்திரப் போராட்ட உணர்வு ஆங்கிலேயர்களிடம் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. 'பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன்' நிறுவனம் கட்டணத்தை குறைக்க, வ.உ.சி.யின் கப்பல் நிறுவனம் நஷ்டமடையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு பெரும் சோக அத்தியாயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பிறகும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டவே, ஆங்கிலேயர்களால் வ.உ.சி. கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் 1908 ஜூலை 9 முதல் 1910 டிசம்பர் 1 வரை அவர் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் செக்கிழுப்பது உள்ளிட்ட பெரும் கொடுமைகளை அனுபவித்தார். சரியான உணவும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த கொடுமைகளை அறிந்த வ.உ.சியின் நண்பரான மகாகவி பாரதியார், “மேலோர்கள் வெஞ்சிறைகளில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ" என்று மனம் நொந்து பாடினார்.

ஆன்மிகம், தத்துவம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வமும், ஞானமும் கொண்ட வ.உ.சி. ஏராளமான நூல்களை எழுதியுள்ளர். சிறையில் கொடுமைகளை அனுபவித்த நேரத்திலும் அவரது படைப்பாற்றல் குறையவில்லை. சிறையில் தத்துவ எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். தனது சுயசரிதை நூலையும் எழுதினார்.

கண்ணனூர் சிறையில் இருந்தபோது 'திருக்குறள்' விளக்கும் நீதிக் கருத்துக்களை மையமாகக் கொண்டு 'மெய்யறம்' என்ற நூலை வ.உ.சி. எழுதியிருக்கிறார்.  மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணரியல், மெய்யியல் என்று ஐந்து பகுதிகளைக் கொண்ட  இந்நூல் தமிழர்கள் அனைவரது இல்லத்திலும் அவசியம் இருக்க வேண்டிய நூல் என்று நான் சொல்வேன். இந்நூலின் 'அரசியல்' பகுதியில் நாட்டை ஆள்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவருக்கான அறம் பற்றி வகுப்பே எடுத்திருக்கிறார். அரசியலில் இருப்பவர்கள் குறிப்பாக ஆட்சியாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

'மெய்யறம்' நூலில் பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள வ.உ.சி., பெண்களின் மறுமணம் பற்றியும் எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "துணையிழந்த பெண்களை மணப்பது புண்ணியம்" என்று நூறாண்டுகளுக்கு முன்பே வ.உ.சி.  கூறியிருக்கிறார் என்றால் எப்படிப்பட்ட அவர் தலைவராக இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் இது போன்ற கருத்தைக்கூற பெரும் துணிவு வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் துயரத்தையும் குறிப்பாக பெண்கள் துயரத்தை அறிந்து அதற்கான தீர்வையும் முன்வைப்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். அந்த வகையில் என் மனதில் உயர்ந்து நிற்கிறார் வ.உ.சி.

சிறைக் கொடுமைகளால் வ.உ.சி.யின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 1912 டிசம்பர் 12-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறைக்குச் செல்லும் முன்பு இருந்த நிலை, சிறையில் இருந்து வெளியே வரும்போது அப்படியே தலைகீழாக மாறியிருந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வ.உ.சி.யை வரவேற்கக் கூட யாரும் வரவில்லை என்பதைப் படிக்கும்போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

நாட்டின் விடுதலைக்காகப் போராடியதால் வ.உ.சி.யின் 'பாரிஸ்டர் பட்டம்' பறிக்கப்பட்டது. இதனால் வழக்கறிஞராக அவரால் தொழில் செய்ய முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த வ.உ.சி. மனைவி, குழந்தைகளுடன் வட சென்னையில் பெரம்பூர் பகுதியில் குடியேறினார். 1936 நவம்பர் 18-ம் தேதி தூத்துக்குடியில் அவர் காலமானார். வ.உ.சியின் இறுதிக்கால வரலாறுகளை படிக்கும்போது தாங்க முடியாத துயரம் ஏற்படுகிறது. நாட்டுக்காக தனது இளமை, சொத்து, சுகம், தொழில் அனைத்தையும் இழந்து கடைசியாக தன்னையும் இழந்த வ.உ.சி.யின் வரலாறு ஒவ்வொரு இந்தியர்களையும் சென்றடைய வேண்டும். இன்று நாம் சகல வசதிகளுடனும், சுதந்திரமாகவும் வாழும் இந்த தேசம், வ.உ.சி. போன்ற தியாகிகள் நமக்கு கொடுத்தது. இதனை உணர்ந்து நாட்டுக்காக உழைப்பதே 150-வது பிறந்த நாளில் வ.உ.சிக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்க முடியும்.

வ.உ.சி. இறுதியாக வாழ்ந்த பெரம்பூர் இல்லத்தை தமிழக அரசு வாங்கி நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறேன். வ.உ.சி. யின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் இதையும் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக