ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும் - ஜி.கே.வாசன்


மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதோடு, பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் உள்ளவற்றை விரைவாக செயல்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், வருமான வரி இல்லா உச்சவரம்பு, வருமான வரி குறைப்பு எல்லாம் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் இருப்பதால் நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, நிகழ்த்திய உரையில் ஔவையாரின் ஆத்திச்சூடியையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் மேற்கோள் காட்டியதோடு, பல்வேறு திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக விவசாயத்துறைக்கு ரூபாய். 2.83 இலட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூபாய். 69 ஆயிரம் கோடியும், கல்வித்துறைக்கு ரூபாய். 99,300 கோடியும், தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூபாய். 27,300 கோடியும், பழங்குடியினர் நலன் காக்க ரூபாய். 53 ஆயிரம் கோடியும், பெண்களுக்கான திட்டங்களுக்காக ரூபாய். 28,600 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக சீர்திருத்த திட்டங்கள் வரும் காலங்களில் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும்.

மேலும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு 15 இலட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பதற்கும், விவசாயத்துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டம் கொண்டுவரப்படுவதற்கும், கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக தானியலட்சுமி திட்டம் தொடங்கப்படுவதற்கும், மாவட்டம்தோறும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கும், ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படுவதற்கும், 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படுவதற்கும், மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க, முதலீட்டாளர்களை ஈர்க்க, அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய, வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க, அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த, வேலை வாய்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி தர உள்ளிட்ட அனைத்து துறைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல 5 இலட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்பது உள்ளிட்ட வருமான வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு பொது மக்களுக்கு பயன் தரும்.

மொத்தத்தில் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவாயை உயர்த்துவதற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஏன் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்குமான நம்பிக்கைக்குரிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் இடம் பெற்றுள்ளது.

எனவே மத்திய நிதி அமைச்சரின் நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை த.மா.கா சார்பில் வரவேற்று, நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் விரைவாக செயல்பாட்டுக்கு வந்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, பொருளாதாரத்தை உயர்த்தி மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக