ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு 
எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் என்ற பூதம் மூலம் தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் நடவடிக்கைகளால் காவிரி டெல்டா பகுதி மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். ஆகவே, வளர்ச்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நாசக்கார திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அழிவுத் திட்டங்களிலிருந்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாத்து, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றனர்.


இந்நிலையில், ‘காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது.’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முதல்வரின் அறிவிப்பிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், இது வெறும் அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல், தமிழக முதல்வர் அறிவித்தபடி சிறப்பு சட்டம் கொண்டுவர தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதற்கான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி அதற்காக தன்னலமற்று போராடிய அனைவர்க்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக