தனது ஆலோசனைக் குழுவுடன் ஜூன் 25 மற்றும் 26, 2020 ஆகிய நாட்களில் மெய்நிகர் கூட்டங்கள் நடத்திய பதினைந்தாவது நிதி ஆணையம், ஆணையம் தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தது.
பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர் திரு. என்.கே. சிங் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில், ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 25 ஜூன், 2020 அன்று நடைபெற்றக் கூட்டத்தில், ஆலோசனைக் குழுவில் இருந்து டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், டாக்டர். சஜ்ஜித் Z சினாய், டாக்டர். பிரச்சி மிஷ்ரா, திரு. நீல்காந்த் மிஷ்ரா மற்றும் டாக்டர். ஓம்கார் கோசுவாமி ஆகியோரும், சிறப்பு அழைப்பாளராக டாக்டர். ரத்தின் ராயும் கலந்துக் கொண்டனர். 26 ஜூன், 2020 அன்று நடைபெற்றக் கூட்டத்தில், ஆலோசனைக் குழுவில் இருந்து டாக்டர். அர்விந்த் விர்மானி, டாக்டர். டி.கே. ஸ்ரீவத்சவா, டாக்டர். எம். கோவிந்த ராவ் மற்றும் டாக்டர். சுதிப்டோ முண்ட்லே ஆகியோர், டாக்டர். ஷங்கர் ஆச்சார்யா மற்றும் டாக்டர். ப்ரொனாப் சென் ஆகியோருடன் கலந்துக் கொண்டனர். 2020-21-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பதினைந்தாவது நிதி ஆணையம் சமர்பித்தப் பிறகு நடைபெறும் மூன்றாவது கட்டக் கூட்டமும், கொவிட்-19 பெருந்தொற்றால் தேசியப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நடைபெறும் இரண்டாவது கூட்டமும் இதுவாகும்.