இலங்கையின் சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழர்களின் விருப்பமாகும்.
சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்த போதே அதற்கு இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது சிங்கள மொழியில் மட்டுமல்ல தமிழ் மொழியிலும் ஏற்கனவே எப்படி தேசிய கீதம் இசைக்கப்பட்டதோ அதே போல தொடர்ந்து இலங்கை சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று இலங்கை வாழ் தமிழர்கள் குரல் கொடுத்தனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், பொது மக்களும், பல்துறையைச் சேர்ந்தவர்களும் இலங்கையின் சுதந்திர தின தேசிய நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் இசைக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்திய அரசு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் நேற்றைய தினம் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டிருக்கிறது.
அதாவது தமிழ் மொழியில் இசைக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இந்திய அரசு உடனடியாக இலங்கையோடு தொடர்பு கொண்டு இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் இசைக்க வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவித்து தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்து தொடர்ந்து தமிழ் மொழியிலும் இசைக்கப்பட உறுதி பெற வேண்டும்.
குறிப்பாக இலங்கையானது – மூன்று மொழிகள், நான்கு மதங்கள், பல இனங்கள் போன்றவற்றால் ஒன்று சேரும் போது தான் அதற்கு அடையாளம் என அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இலங்கையில் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும், அங்குள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடில்லாமல் சிங்களர்களுக்கு உரிய உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்பது தான் முறையானது. எனவே இலங்கை வாழ் தமிழர்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக