கரோனா வைரஸ் பாதிப்பு: பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
கரோனா வைரஸ் ‘கோவிட்-19’ எனும் நோய் உலகம் முழுவதும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
‘‘கரோனா வைரஸ், கொல்லும் நோய்த் தொற்று, தாக்கிய உடனே மரணம் ஏற்படாது; அந்நோய் தீவிரமடைந்து, மரணமடையும் விகிதம் என்பது, வெறும் 3 விழுக்காடு தான்’’ என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது காய்ச்சல், தொடர் இருமல், தும்மல், அதீத களைப்பு, இவற்றுடன் சில தருணங்களில் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால், அது கரோனா அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகாமையிலுள்ள மருத்துவரை அணுகவேண்டும்.
கரோனா வைரஸ், மனிதரிடமிருந்து, மனிதருக்குப் பரவுகிறது. அதாவது, கரோனா பாதித்த ஒருவரது எச்சில் அல்லது சளி மூலம் இந்நோய் பரவ வாய்ப்பு உண்டு. இதற்காகத்தான், வெளியில் சென்றுவந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவர் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் மற்றும் அதீத களைப்பு குறைக்கப்பட்டு, பூரண உடல் நலத்தை நோக்கிய சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் பராமரிக்கப்படும் தனிமை வார்டு, நல்ல காற்றோட்டம் உள்ளதாகப் பராமரிக்கப்படுகிறது.
எனவே, “வருமுன் காப்போம்“ என்பதை அடிப்படையாகக் கொண்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முடிந்த வரை, முழங்கை வரை, கைகளை கழுவ வேண்டும். கரோனா அறிகுறி அறிந்தால், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கைகளை கழுவும்போது, வெறுமனே குழாய் நீரில் நீட்டிவிட்டு எடுத்துவிடக் கூடாது. சோப்பு போட்டு, நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
கரோனா அறிகுறி இருந்தால், மத்திய சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர உதவி எண்ணான, 01123978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால், 104 இலவச மருத்துவ சேவை எண்ணைப் பயன்படுத்தி தகவல் அளிக்கலாம். இதுதவிர 044-29510400, 044-29510500, அல்லது 9444340496, 8754448477 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். மக்கள் அலட்சியமாக இல்லாமல், இது விடயத்தில் சுகாதாரத் துறை கூறுவதைக் கவனமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நோய்பற்றி, அலைப்பேசிகளில் கூறப்படும் அறிவுரை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. எல்லோருக்கும் புரியும் வகையில் தமிழிலும் சொல்லவேண்டும். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படட்டும்! இது கட்சிப் பிரச்சினையல்ல - மக்கள் பிரச்சினை - ஒன்றுபட்டு செயல்படுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக