புதன், 11 மார்ச், 2020

CAA_NRC_NPR ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி அரசு மறுப்பு - மு.க.ஸ்டாலின்


“ஊழல் புகார்களில் பாஜகவிடம் வசமாக சிக்கியுள்ள அச்சத்தால் CAA_NRC_NPR ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி அரசு மறுப்பு”  - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி.

மு.க.ஸ்டாலின் : என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக் கூடாது, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஏற்கனவே பல நாட்களாக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்பிஆர் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நேரமில்லா நேரத்தில் நான் இந்தப் பிரச்சினையை எழுப்பி உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சொன்னேன்.


இதற்குப் பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஏற்கனவே என்னென்ன தவறான விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாரோ, அதே விளக்கங்களைத்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘இந்தச் சட்டத்தால் எந்த மக்களுக்கும் பாதிப்பில்லை. குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு பாதிப்பில்லை’ என்று தொடர்ந்து தவறான தகவலை அவையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்று இன்று நான் அவையில் எடுத்து சொன்னேன்.

ஏற்கனவே 13 மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் இதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இதைக் கடுமையாக எதிர்த்துத் தீர்மானம் போட்டிருக்கிறார். அதேபோல், நாடாளுமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்திருந்தாலும், ஆந்திர மாநில சட்டமன்றத்தில் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜகன்மோகன், எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இந்தச் சட்டத்தை முதலில் ஆதரித்த நிலையில் தெலுங்கானா மாநில முதலமைச்சரும் இதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். இந்நிலையில் இந்தச் சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து பேசமுடியாது என அமைச்சர் சில விளக்கங்களைத் தந்தார்.

கேரள சட்டமன்றத்தில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு சென்று வழக்கும் போட்டுள்ளனர். புதுவை மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்திலும் இதை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து எல்லா மாநிலங்களும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் இரவு பகல் பாராமல் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். அதற்கு அவர்கள் செவி மடுக்கவில்லை. அதனால் அதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்காக மட்டும் தான் வெளிநடப்பு செய்திருக்கிறோம். மீண்டும் உள்ளே செல்கிறோம். எனவே வெளிநடப்பு செய்த செய்தியை மட்டுமே போடாமல், மீண்டும் உள்ளே செல்லும் செய்தியையும் சேர்த்து வெளியிடுங்கள். வெளிநடப்பு செய்து விட்டார்கள் என்று மட்டுமே செய்தியைப் பரப்பாதீர்கள்.

செய்தியாளர் : கடந்த முறையும் நீங்கள் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பி இருந்தீர்கள். இந்த முறை அமைச்சர் பதில் அளிக்கும் போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடியச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றினால், அது அந்தசச் சட்டத்தைக் கட்டுப்படுத்தாது என கூறியுள்ளாரே?

மு.க.ஸ்டாலின் : பிறகு ஏன் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தையாவது வெளியிடுங்கள் என்று சொன்னோம். அதையும் வெளியிடவில்லை.

செய்தியாளர் : மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காகத் தான் நாங்கள் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்களே?

மு.க.ஸ்டாலின் : மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காக அல்ல; அவர்கள் (ஆட்சியாளர்கள்) அச்சத்துடன் இருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டால் அவர்களது ஆட்சி போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆட்சி போவது மட்டுமல்ல; இவர்கள் மீதான ஊழல், லஞ்சப் புகார்கள், சிபிஐ விசாரணை போன்ற அத்தனை விவகாரமும் மத்திய அரசின் வசம் உள்ளது. அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். அந்தப் பயத்தால் தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட பயப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக