திங்கள், 9 மார்ச், 2020

டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யக்கூடிய நெல்லை விற்க கூட முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். - கே.பாலகிருஷ்ணன்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:  

தமிழ்நாட்டில் இன்றைக்கு விவசாயிகள் ஒரு நெருக்கடியான நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. 3 ஆண்டு முடிந்து 4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எடப்பாடி அரசு விவசாயிகள் வாங்கிய  கடனை ஏன் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை?.

ஆனால் திருவாரூரில் நடந்த விழாவில் அதிமுக அரசு விவசாய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது போலவும், அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் முதல்வர் எடப்பாடி பேசியுள்ளார். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என அவர் எங்கு சென்று கணக்கெடுத்தார். அப்படி யாரும் கணக்கெடுத்து கொடுத்ததாக தெரியவில்லை.


டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யக்கூடிய நெல்லை விற்க கூட முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி, எல்லா நெல்லையும் அரசே கொள்முதல் செய்து கொள்ளும் என ஏன் சொல்லவில்லை. 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கேட்டால் பணம் இல்லை. பணம் வந்தாலும் ஆயிரம் மூட்டை பிடிப்பதற்குத்தான் பணம்  வருகிறது என்கிறார்கள். பணம் வந்த இடங்களில் கேட்டால் பணம் வந்துள்ளது, ஆனால் சாக்கு வரவில்லை என காரணம் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் விவசாயிகள் வாய்க்கால்களிலும், வரப்புகளிலும் காவல் காத்தனர். ஆனால் இப்போதோ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மாதமாக நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர். 

உற்பத்தி செய்த நெல்லை கூட விற்க முடியாத நிலையில் விவசாயிகள் இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்து விட்டு எப்படி  ஒரு முதல்வர் உண்மைக்கு மாறாக, தைரியமாக பேச முடிகிறது என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக