திங்கள், 9 மார்ச், 2020

டெல்லி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் - பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் - SDPI நெல்லை முபாரக்


டெல்லி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் - பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் - நெல்லையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். 

அரசமைப்பு விரோத சட்டமான சி.ஏ.ஏ.வுக்கு எதிரான ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டம் எனும் பெயரில் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பெரும் இனக்கலவரத்தை ஆளும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நடத்தியுள்ளன.



நான்கு நாட்கள் நடந்த இனக்கலவரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு கணக்கு சொன்னாலும், பலரையும் காணவில்லை என்று காவல்துறையினரிடமும், மருத்துவமனையின் பிணவறையிலும் அப்பகுதி மக்கள் தேடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டமிட்ட இனக்கலவரமானது வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்ட சங்பரிவார் குண்டர்களுடன், காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட கலவரம் என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கும்பலாக மக்களை அடித்துக் கொல்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் என்று, டெல்லி காவல்துறையினர் கலவரக்காரர்களுடன் இணைந்து பாரபட்சமாகவே நடந்துள்ளனர் என்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்திய ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.

2002 குஜராத் இனக் கலவரத்தை முன்மாதிரியாகக் கொண்டே டெல்லி இனக் கலவரமும் நடத்தப்பட்டுள்ளது.

கலவரத்தில் துப்பாக்கிகளும், பெட்ரோல் குண்டுகளும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் மரணமடைந்தவர்களில் பலரும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல் காயமடைந்தவர்களில் ஏராளமானோர் துப்பாக்கி குண்டுகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். வன்முறைக் கும்பலிடம் சர்வ சாதாரணமாக துப்பாக்கிகள் புழங்குவது என்பது மிகவும் ஆபத்தானது என்பதால் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கலவரங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கக்கூடிய, வெறுப்புப் பேச்சுக்களுக்கு உரியவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். ஆனால், இவர்களை கைது செய்வதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மெத்தனம் காட்டியே வருகிறது.

டெல்லி இனக்கலவரம் குறித்து உலகின் பல நாடுகளில் உள்ள பாராளுமன்ற அவைகளில் விவாதங்கள் நடைபெற்று, சிறுபான்மை மக்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கும் வேளையில், மத்திய பாஜக அரசோ அதுதொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் நடத்தக்கூட அனுமதிக்க மறுக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்திற்கு வராமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உதாசீனப்படுத்தி வருகின்றார்.

ஆகவே, டெல்லி இனக்கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக