மார்ச் 09ல் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- நெல்லை முபாரக்
சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி,யை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களும் தன்னிச்சையாக ஆங்காங்கே தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தது.
ஆனால், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தமிழக அரசு அது தொடர்பான விவாதத்தை கூட நடத்தவில்லை. இந்நிலையில் நாளை (மார்ச்.09) தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கத்தை போன்று வலுவான சட்டமன்ற தீர்மானத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.
ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக ஜனநாயக வழியில் எவ்வித இடையூறுமின்றி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை பொய் வழக்குகளை பதிவு செய்து வருவதோடு, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டி வருகின்றது. ஜனநாயக உரிமைப்படி போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியதுதான் காவல்துறையின் கடமையே தவிர, போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதல்ல.
தமிழக முதல்வரை நாங்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தபோது கூட, காவல்துறை போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் எவ்விதத்திலும் அதனை தடுக்காது என தமிழக முதல்வர் உறுதியளித்திருந்தார். ஆனால், தமிழக காவல்துறை பொய்யான வழக்குகளை பதிவு செய்து போராட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆகவே, தமிழக அரசு ஜனநாயக வழியில், தங்களது உரிமைக்காக, வாழ்வாதாரத்தை காப்பதற்காக நடத்திய போராட்டங்கள் மீதான அத்துனை வழக்குகளையும் வாபஸ்பெற வேண்டும். கூடங்குளம், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் முதல் தற்போதைய சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் வரையிலான அனைத்து போராட்ட வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழகம் தழுவிய தொடர் தர்ணா போராட்டம்:
சி.ஏ.ஏ., என்.பி.ஆர். என்.ஆர்.சிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மார்ச் 06 முதல் மார்ச் 10ம் தேதி வரை, 'எதிர்த்து நில் போராடு' என்ற முழக்கத்துடன், தமிழகம் தழுவிய தொடர் தர்ணா போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்டு வருகின்றது. அரசமைப்பு விரோத சட்ட நடவடிக்கைகளை வாபஸ் பெறும்வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து போராடும். ஒருபோதும் பின்வாங்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கோவையின் அமைதியை கெடுக்க நினைக்கும் இந்துமுன்னணி - காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:
கோவையில் இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் வேண்டுமென்றே பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆகவே, கடந்தகால நிகழ்வுகளை கருத்தில்கொண்டு கோவையின் அமைதியை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக